வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்
மூலக்களம் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூலக்குளம் மேட்டுப்பாளையம் அடுத்த முத்தரையர் பாளையம் சேரன் நகர் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சுமித்ரா (வயது 41). கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் சுமித்ராவுக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் மதியம் உறவினர் ஒருவர் மதிய உணவு கொடுத்து விட்டுச்சென்றார். இதை பார்த்த எதிர் வீட்டை சேர்ந்த முருகன் (40), மதுபோதையில் சுமித்ராவின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை ஆபாசமாக திட்டி, தாக்கினார். இதை தட்டிக்கேட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த வீட்டின் உரிமையாளரான தமிழரசி என்பவரையும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சுமித்ரா மேட்டுப் பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.