பணம் அல்ல; மக்களின் மனதை கொண்டு வந்துள்ளேன்: அபுதாபியில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

நான் தமிழகத்தில் இருந்து பணத்தை எடுத்துவரவில்லை, தமிழர்களின் மனதை எடுத்து வந்துள்ளேன் என்று அபுதாபியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-03-28 14:16 GMT
அபுதாபி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் வந்தடைந்தார். 25-ந் தேதி காலை துபாய் சர்வதேச நிதி மையத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அமீரக மந்திரிகளை சந்தித்து பேசினார். பின்னர் அன்று மாலை துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டு அரங்கை திறந்து வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

துபாயில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்ற நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் அவர் அபுதாபிக்கு காரில் புறப்பட்டு சென்றார். அபுதாபியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், இந்திய சமூக மற்றும் கலாசார மையத்தில்  தமிழ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்மில் ஒருவர், நம்ம முதல்வர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அபுதாபிவாழ் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது: 

நான் துபாய்க்கு பணத்தை எடுத்து வந்ததாக இந்த பயணம் குறித்து  சிலர் அவதூறு பரப்புகின்றனர்.  நான் பணத்தை கொண்டுவரவில்லை; மக்களின் மனத்தை எடுத்து வந்துள்ளேன்.  உங்களில் ஒருவனாக நான் உள்ளேன், நம்மில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். தமிழுக்கும், தமிழ் நலனுக்கும் எதிரானவர்களுக்கு நம்முடைய உணர்வுகள் புரியாது.

தமிழ்நாட்டை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கும் பயணமாக எனது பயணம் அமைந்துள்ளது. வெளிநாட்டு பயணத்தை திசை திருப்ப வேண்டும் என சிலர் தவறான பிரசாரத்தை பரப்புகின்றனர்.  எனது ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியை சிலரால் தாங்க முடியவில்லை.  தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்ற உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஒருபுறம் கடந்த காலம் மறுபுறம் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டுள்ளேன” என்றார். 

மேலும் செய்திகள்