தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
உள் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, இன்று (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.