பழனி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி..!

பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கார் மோதி நிற்காமல் சென்ற விபத்தில் 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-03-28 01:26 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேலவந்த சாவடியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை சாமிநாதன்(49), மகன்கள் தவப்பிரியன்(15), கமலேஷ்(12) மற்றும் மைத்துனர் சேகர் ஆகிய 4 பேர் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். தஞ்சாவூரில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை காரில் வந்த நான்கு பேரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

சத்திரப்பட்டி அருகே உள்ள பெரியபாலம் அருகே பாதயாத்திரையாக நடந்து சென்றபோது நான்கு பேர்மீதும் கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சாமிநாதன்(49), சேகர்(45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.சிறுவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சத்திரப்பட்டி போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடிபட்ட சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கமலேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த தவப்பிரியன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சத்திரப்பட்டி போலீசார் இந்த விபத்துகுறித்தும், நிற்காமல் சென்ற கார் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்