சென்னையில், துப்பாக்கிகளுடன் போதைப்பொருட்கள் கும்பல் கைது

சென்னையில் துப்பாக்கிகளுடன் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-27 18:54 GMT
சென்னை,

சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் போதைப்பொருள் விற்பவர்கள் வேட்டையாடி கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

மொத்த விற்பனையாளர்களும், சில்லரை விற்பனையாளர்களும் தினமும் பிடிபடுகிறார்கள். போதை மாத்திரை விற்பவர்களும் சிறையில் தள்ளப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு இதுவரை சுமார் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 620 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 220 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 10 ஆயிரம் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பப்பட்டு உள்ளது. இந்த கும்பலிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்கள், ரூ.5 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

துப்பாக்கிகளுடன் கைது

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை கும்பலைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக, ஆயிரம் விளக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி சோதனை வேட்டை நடத்தினார்கள். அக்நான் அலி என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் சொன்ன தகவலின் பேரில் ஐஸ்-அவுஸ் பகுதியில், முகமது ஷாமிர்கான், முகமது முர்தசில் ஆகிய மேலும் 2 பேர் கைதானார்கள்.

இவர்களிடம் இருந்து 4 ஏர்பிஸ்டல் துப்பாக்கிகள், 2 கத்திகள் மற்றும் ஏராளமான போதைக்கு பயன்படுத்தும் தூக்க மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 1½ கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

எதிரிகளை மிரட்டுவதற்காக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக கைதானவர்கள் தெரிவித்தனர். ஏர்பிஸ்டல் ரக துப்பாக்கிகள் ஆபத்தானவை இல்லை என்றும், அதை வைத்திருக்க அனுமதி தேவை இல்லை என்றும் தெரிகிறது.

மேலும் செய்திகள்