2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியது

புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியது. ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் வந்த கவர்னர் மற்றும் பயணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் வரவேற்றனர்.

Update: 2022-03-27 17:56 GMT
புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியது. ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் வந்த கவர்னர் மற்றும் பயணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் வரவேற்றனர்.
விமான சேவை
புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இந்த சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே, நாடு முழுவதும் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விமான கொள்கையை அறிவித்தது. அதன்படி ‘உதான்’ திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான்வழியாக இணைக்க திட்டமிடப்பட்டது. அதில், பயணிகளின் பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்று, விமான நிறுவனங்களுக்கு அளிக்கும் என அறிவிப்பு வெளியிட்டது.
நிறுத்தப்பட்டது
அந்த திட்டத்தில் சேர்ந்து, தடைப்பட்டிருந்த விமான சேவையை மீண்டும் தொடக்க புதுச்சேரி மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, மீண்டும் பெங்களூருவுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சேவையை தொடங்கியது.
இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூருக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஐதராபாத்திற்கு மட்டும் விமானம் இயங்கப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவியதால் கடந்த 2020 மார்ச் இறுதியில் நாடு முழுவதும் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் புதுவை மாநிலத்தில் இருந்து ஐதராபாத்திற்கு இயக்கப்பட்ட விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் தொடங்கியது
தற்போது கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் இருந்து மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தது. 
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை சந்தித்து வலியுறுத்தினார். அதன்பேரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் மீண்டும் விமான போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது.
ரங்கசாமி வரவேற்றார்
இன்று மதியம் 12.05 மணிக்கு ஐதராபாத்தில் புறப்பட்ட விமானம் 1.30 மணிக்கு புதுச்சேரி வந்து சேர்ந்தது. அந்த விமானத்தை வரவேற்கும் விதமாக இருபுறமும் இருந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு வழங்கப்பட்டது. 
மொத்தம் 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 62 பயணிகள் வந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பெங்களூரு புறப்பட்டது
ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி வந்த விமானம், தொடர்ந்து மதியம் 1.50 மணிக்கு பெங்களூரு புறப்பட்டது. இதில் பா.ஜ.க. புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா உள்பட 58 பயணிகள் சென்றனர். இந்த விமானம் மதியம் 2.50 மணிக்கு பெங்களூரு சென்று சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு 4.10 மணிக்கு புதுச்சேரி வந்து சேர்ந்தது. அதன்பின் மாலை 4.30 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்ட விமானம் மாலை 6.15 மணிக்கு மீண்டும் ஐதராபாத் சென்று சேர்ந்தது.

மேலும் செய்திகள்