மாநில அளவிலான கைப்பந்து போட்டி: திண்டுக்கல் அணி சாம்பியன்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Update: 2022-03-27 16:22 GMT
திண்டுக்கல்,

தமிழ்நாடு கைப்பந்து கழகம் மற்றும் ஜி.டி.என். கல்லூரி சார்பில், திண்டுக்கல்லில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. ஜி.டி.என். கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இப்போட்டியில், சென்னை, மதுரை, கோவை, சேலம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்று விளையாடின. 

கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இப்போட்டியில் நாக்-அவுட் மற்றும் கால்இறுதி சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்று அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல்-காஞ்சிபுரம் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. பரபரப்புக்கு பஞ்சமின்றி நடந்த இப்போட்டியில் திண்டுக்கல் அணி 32-25 என்ற புள்ளிகள் கணக்கில் காஞ்சிபுரம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 

பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், திண்டுக்கல் அணிக்கு பரிசுக்கோப்பை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை ஜி.டி.என். கல்வி குழும தலைவர் ரெத்தினம், நடிகர் கருணாஸ் ஆகியோர் வழங்கினர். 2-வது இடம் பிடித்த காஞ்சிபுரம் அணிக்கு ரூ.15 ஆயிரமும், 3-வது இடம்பிடித்த சிவகங்கை அணிக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்