கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம்..!
கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் புதிதாக வாட்டர் சைக்கிள் படகு அறிமுகப்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்,
கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி செய்வதற்கு வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம் உள்ளதால் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
களைகட்டிய கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இன்று வார விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மிதமான வெப்பம் மற்றும் குளிர்ந்த சீதோஷண சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தவாறு கொடைக்கானல் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டு மகிழ்ந்தனர்.
மேலும் நகரிலுள்ள சுற்றுலா தலங்களில் நட்சத்திர ஏரி முக்கியமானதாகும். இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 படகு குழாமும், நகராட்சி சார்பில் ஒரு படகு குழாமும் செயல்பட்டு வருகிறது. நகருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஏரியில் படகு சவாரி செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வாட்டர் சைக்கிள் படகு
இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பயணிகளை கவரும் விதமாக வாட்டர் சைக்கிள் படகுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த படகு ஒரு நபர் மற்றும் இரண்டு நபர்கள் சவாரி மேற்கொள்ளும் வகையில் இரண்டு வகையாக உள்ளது. இந்த வாட்டர் சைக்கிள் படகுகளில் சவாரி செய்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை பொருட்படுத்தாமல் இந்த படகுகளில் சவாரி செய்தும் செல்பி எடுத்தும் பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் இந்த படகு சவாரி செய்வதில் புதுவித அனுபவத்தை தருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். இந்த வாட்டர் சைக்கிள் படகு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சீசன் காலங்களில் கூடுதலான படகுகளை இயக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.