கோவை வெள்ளலூரில் மறைமுக தேர்தலின் போது நடந்த வன்முறை தொடர்பாக 9 பேர் கைது
புதிதாக தேர்வான அதிமுக பேரூராட்சி தலைவர் மருதாச்சலத்தின் மகன் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை,
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு கோவை தெற்கு ஆர்.டி.ஓ. இளங்கோவன், தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
காலை 9 மணிக்கு கவுன்சிலர்கள் அனைவரும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். முதலில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வந்தனர். அவர்களை போலீசார் பாதுகாப்புடன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தி.மு.க கவுன்சிலர்கள் வந்தபோது அவர்களுடன் தி.மு.க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலரும் உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் கவுன்சிலர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். மற்றவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரும் உள்ளே நுழைய முயன்றதை அடுத்து போலீசார் தடுத்தனர். இதற்கிடையே தி.மு.கவினர் சிலர், போலீசாரை மீற உள்ளே நுழைய முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். அப்போது மதுக்கரை நகராட்சி 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் குணசுந்தரியின் கணவர் செந்தில்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும் காயம் அடைந்தார்.
இதற்கிடையே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் போலீசார் அ.தி.மு.க.வை சேர்ந்த சிலரை பிடித்து அப்புறப்படுத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இறுதியாக அ.தி.மு.க வேட்பாளர் மருதாச்சலம் 8 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக புதிதாக தேர்வான அதிமுக பேரூராட்சி தலைவர் மருதாச்சலத்தின் மகன் உட்பட 9 பேரை கைது செய்து போத்தனூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.