சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசாருக்கு அரிவாள் வெட்டு..!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்களை பிடிக்க சென்ற போலீசாருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி தனது நண்பர் ஹரிகிருஷ்ணன் என்பவரும் கடந்த 23-ம் தேதி சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு சென்று உள்ளனர்.
கடற்கரையில் இருந்த இவர்களிடம் பத்மாஸ்வரன், அஜித், தினேஷ்குமார் ஆகிய 3 வாலிபர்கள் தகராறு செய்துள்ளனர். பின்னர், ஹரிகிருஷ்ணன் உடன் வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து உள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, நடந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சாயல்குடி போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான 3 பேரையும் தீவிரமா தேடிவந்தனர். இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் கமுதி அருகே உள்ள குண்டுகுளம் கிராமத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் அங்கு விரைந்து சென்ற போலீசார், பதுங்கி இருந்த பத்மாஸ்வரன், தினேஷ்குமாரை பிடிக்கை முயன்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக 2 போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றனர்.
அப்போது சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பத்மாஸ்வரன், தினேஷ்குமார் ஆகிய 2 பேருக்கும் கால் எழும்பு முறிந்தது. பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் மீட்ட போலீசார், சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
பாலியல் தொல்லை வழக்கில் இரண்டு வாலிபர்களை கைது செய்ய முயன்ற போலீசாரை அவர்கள் வெட்டி உள்ளனர். இதில் நவநீத கிருஷ்ணன், கருப்பசாமி என்ற இரண்டு போலீசாருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தப்பியோட முயன்ற போது இருசக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் பத்மாஸ்வரன், தினேஷ்குமாருக்கு கால் எழும்பு முறிவு ஏற்பட்டதால் அவர்களும் மருத்துமனையில் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் தலைமறைவாக உள்ள அஜித்தை தேடி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.