இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.30-க்கு விற்க முடியும்- கே.எஸ்.அழகிரி
மோடி பிரதமர் ஆன பிறகு சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 108 டாலரை தொட்டது இல்லை என்றும், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 ரூபாய்க்கு விற்க முடியும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
மீனவர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் கடல் தமிழ்வாணன், மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, செயலாளர் ஜெ.ஜோர்தான், மீனவர் அணி மாநில பொதுச்செயலாளர் ஆர்.பார்த்திபன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது, கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை, இந்தியாவில் எரிபொருள் விலை அதிகமாக இருப்பதற்கு அரசாங்கங்களின் தவறான கொள்கைதான் காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏற்ற, இறக்கத்துடன் தான் காணப்படும். மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 108 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த சுமையை மக்கள் மீது திணிக்காமல் மானியம் வழங்கி ஒரு லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.30-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு ஒருபோதும் கச்சா எண்ணெய் 108 டாலருக்கு விற்பனை செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.30-க்கு விற்க முடியும். ஆனால், அவர்கள் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.22 லட்சம் கோடி வரி விதித்து இருக்கிறார்கள். இதனால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருக்கிறது. மக்கள் இதனை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தேசிய மீன்வள மசோதாவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசின் கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது. இந்தோனேஷியா, செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் அபராதம் இன்றி விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
லூர்தம்மாள் சைமன் பெயரை சூட்ட வேண்டும்
காற்றின் வேகத்தால் திசை மாறி அன்னியநாட்டு கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்கள், அத்துமீறி நுழைந்ததாக கருதி கைது செய்யப்படுவதை தடுக்க இந்திய கடற்பரப்போடு ஒட்டியுள்ள அண்டை நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். மீன்பிடிக்க சென்று காணாமல்போகும் மீனவர்களை 6 மாதத்தில் இறந்தவர்களாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கங்களில், கூட்டுறவு வங்கிகளை உருவாக்க வேண்டும்.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பெயரை சூட்ட வேண்டும். தமிழக மீன்வளத்துறைக்கு தனி மீன்துறை அரசு செயலாளரை நியமிக்க வேண்டும். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் குமரி முதல் குஜராத் வரையிலும், மேற்கு வங்கம் முதல் ராமேசுவரம் வரையிலும் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் டி.என்.பிரதாபன் தலைமையில் ராகுல்காந்தியால் தொடங்கி வைக்கப்பட உள்ள “கடல் உரிமை பயணத்தை” சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“ஆர்ப்பாட்டத்திற்கு 1,000 பேரை கூட்டினால் எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது”
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு தேர்தல் தமிழக பொறுப்பாளர் கவுரவ் கோகாய் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஆய்வு செய்தார். கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு முன்னதாக கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் கோடியோடு துபாய் சென்றுள்ளார் என்கிறார். இதற்கு, ரூ.5 ஆயிரம் கோடியை விமானத்தில் எப்படி கொண்டு செல்ல முடியும்? அப்படியானால், மத்திய அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது? உளவுத்துறை என்ன செய்தது? விமான நிலைய அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்றெல்லாம் சமூகவலைத்தளத்தில் கேள்வி எழுகிறது. ஒரு குற்றச்சாட்டு தெரிவித்தால், அதில் குறைந்தபட்ச உண்மையாவது இருக்க வேண்டும்.
எனவே, இதற்கு அவர் நீதிமன்றத்தின் மூலம் பதில் சொல்ல வேண்டும்.தமிழக பட்ஜெட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் பேரை கூட்டிவிட்டால் அவர்கள் (பா.ஜ.க.) எதிர்க்கட்சி ஆகிவிட முடியுமா? எங்கள் கட்சியின் தொகுதி தலைவர் கூட 5 ஆயிரம் பேரை திரட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.