அம்பேத்கர் பவுண்டேஷனை மூட நினைக்கிறதா அரசு? நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத்தில், நிதி மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது:-

Update: 2022-03-26 18:09 GMT
சமூக நீதிக்கென ஒரு அமைச்சகம் இயங்குவது பாராட்டுக்குரியது. மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த துறைக்கென போதிய நிதி ஒதுக்கப்படுவது இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

இந்த துறையின் திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டைவிட இந்த நிதியாண்டு நிதி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. நிதியை குறைத்தது ஏன்? என்று விளக்க வேண்டும்.

சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களை பாதுகாக்கும் வகையில், பொருளாதார ரீதியாக அவர்கள் நலிவடைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த துறை மூலம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அது நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, அதை மீண்டும் நடைமுறைப்படுத்தி தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்.

சமீபகாலமாக அம்பேத்கர் பவுண்டேஷன் செயல் இழந்து கிடக்கிறது. அது மூடப்பட வேண்டும் என அரசு நினைக்கிறதா? என்று கேள்வி எழுகிறது. ஒருபுறம் அம்பேத்கரை கொண்டாடிவிட்டு, மறுபுறம் அவரது பெயரில் உள்ள பவுண்டேஷனை மூட நினைப்பது எந்த உள்நோக்கத்தில் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் அம்பேத்கர் பிறந்தநாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்