புதுவை காமாட்சியம்மன் கோவில் விழா ஏற்பாடுகள் பந்தல் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் சாவு மேலும் 2 பேர் படுகாயம்
புதுச்சேரி பாரதி வீதி காமாட்சியம்மன் கோவில் விழா பந்தல் சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதுச்சேரி
புதுச்சேரி பாரதி வீதி காமாட்சியம்மன் கோவில் விழா பந்தல் சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பிரம்மோற்சவ விழா
புதுச்சேரி பாரதி வீதியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காலத்தின் போது இந்த விழா நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக கடந்த 16-ந் தேதி பந்தகால் நாட்டப்பட்டது. வருகிற 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.
பந்தல் அமைக்கும் பணி
இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் பந்தல் அமைக்கும் பணி கதிர்காமம் பகுதியை சேர்ந்த மணி மேற்பார்வையில் தொடங்கியது. நேற்று பாரதி வீதி-காமாட்சியம்மன் கோவில் வீதி சந்திப்பில் பந்தல் அமைக்கும் பணியில் மணியின் மகன் ராஜ்குமார் என்கிற வேலு (வயது33), தொழிலாளர்கள் பூரணாங்குப்பம் லட்சுமணன் (40), உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த முத்துலிங்கம் (38), சீர்காழி அருகே உள்ள வள்ளுவன்குடியை சேர்ந்த ஆறுமுகம் (60), சக்திவேல், காந்தி, செல்வம் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.
சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் வேலு, ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் அமர்ந்து ஓலையை கட்டிக்கொண்டு இருந்தனர். கீழே நின்றபடி தேவையான பொருட்களை சக்திவேல், காந்தி, செல்வம் ஆகியோர் எடுத்து கொடுத்தனர்.
சரிந்து விழுந்தது
அப்போது திடீரென ஒரு பக்கம் பந்தல் சரிந்து விழத்தொடங்கியது. உடனே பந்தல் மேல் அமர்ந்திருந்தவர்களும், கீழே நின்றவர்களும் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பினார்கள். ஆனால் அதற்குள் சரிந்து விழுந்ததில் பந்தல் மேல் அமர்ந்திருந்த வேலு, ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வேலு, ஆறுமுகம் ஆகியோர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்கள் முத்துலிங்கம், லட்சுமணன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தடைபட்ட போக்குவரத்து
நடுரோட்டில் பந்தல் சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த பந்தலை அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு நேரமாக பந்தல் கம்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோவில் பிரம்மோற்சவ விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நூலிழையில் உயிர்தப்பிய பெண்கள்
புதுவை பாரதி வீதி-காமாட்சியம்மன் கோவில் சந்திப்பில் பந்தல் சரிந்து விழுந்தபோது அந்த வழியாக ஸ்கூட்டரில் வாணரப்பேட்டையை சேர்ந்த நாகவள்ளி, அவரது உறவுக்கார பெண்ணுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பந்தல் கம்பு ஒன்று அவர்கள் இருவருக்கும் இடையே விழுந்தது. அந்த கம்பு ஸ்கூட்டரின் இருக்கையில் புகுந்து மறுபுறம் சக்கரம் வழியாக வெளியே வந்தது. பந்தல் சரிந்து விழுந்த போது சிக்கி இருந்தால் அவர்களும் இதில் சிக்கி இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் நூலிழையில் நாகவள்ளியும், அவருடன் வந்த பெண்ணும் தப்பினார்கள். அந்த பெண்கள் வந்த ஸ்கூட்டர் சேதமடைந்தது.