முதலீட்டாளர்கள் உடனான மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசினார்.
துபாய்,
துபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடந்து வருகிறது. அங்கு இடம் பெற்றுள்ள இந்திய அரங்கு வளாகத்தில் தமிழ்நாட்டு அரங்கமும் உருவாக்கப்பட்டு உள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அந்த அரங்கை திறந்து வைத்தார். அந்த அரங்கில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா, மருத்துவம், கலைப்பண்பாடு ஆகிய துறைகளின் தொழில்பூங்காக்கள் பற்றிய தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் மந்திரிகளை சந்தித்து பேசி தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட துபாய் பொருளாதார மந்திரி அப்துல்லா பின் டூக் கூறுகையில், “மே மாதம் துபாய் வர்த்தக குழு டெல்லி, மும்பைக்கு வருகிறது. அப்போது தமிழக குழுவினர் எங்களை சந்திக்கலாம்” என்று தெரிவித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாயில் 2-வது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இன்று பிற்பகல் இந்திய தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு துபாயில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. சந்திப்பின் போது தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.