விபசாரம் செய்ய வற்புறுத்துகிறார் - தயாரிப்பாளர் மீது துணை நடிகை பரபரப்பு புகார்

கட்டாயப்படுத்தி தனக்கு தாலி கட்டி உறவு வைத்துக்கொண்டு தற்போது தன்னை விபசாரம் செய்ய வற்புறுத்துவதாக தயாரிப்பாளர் மீது துணை நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Update: 2022-03-25 21:49 GMT
சென்னை,

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில், சினிமா தயாரிப்பாளர் ஒருவர் மீது, துணை நடிகை ஒருவர் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், கட்டாயப்படுத்தி தனக்கு தாலி கட்டி உறவு வைத்துக்கொண்டார் என்றும், தற்போது தன்னை விபசாரம் செய்ய வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

பரமேஸ்வரி

அந்த துணை நடிகையின் பெயர் பரமேஸ்வரி என்ற பைரவி. அவர் சென்னை தாம்பரத்தில் வசிக்கிறார். தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் அவர் துணை நடிகையாக நடித்துள்ளார். கணவரை இழந்த அவருக்கு மகள் இருக்கிறார்.

இந்த நிலையில் வேலூரைச் சேர்ந்த ராஜா தேசிங்கு சுப்பிரமணி என்பவர் தன்னை சினிமா தயாரிப்பாளர் என்றும், இயக்குனர் என்றும் கூறிக்கொண்டு பரமேஸ்வரியிடம் அறிமுகம் ஆகி இருக்கிறார். பரமேஸ்வரியையும் சினிமா தயாரிப்பாளர் ஆக்கு வதாக கூறி சுப்பிரமணி ஆசைகாட்டி உள்ளார். லட்சக்கணக்கில் பணமும் பறித்ததாக தெரிகிறது. பின்னர் பரமேஸ்வரி கழுத்தில் தாலி கட்டி மனைவி ஆக்கி உறவிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் பரமேஸ்வரி நேற்று திடீரென்று பன்னாட்டு பெண்கள் அமைப்பின் தலைவர் செங்கொடி பாலகிருஷ்ணன் துணையோடு டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்தார்.

டி.ஜி.பி. அலுவலகத்தில், சுப்பிரமணி மீது பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

சுப்பிரமணி மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளது. மயிலாடுதுறைக்கு சினிமா தயாரிப்பு விஷயமாக சென்ற போது, அங்குள்ள கோவில் ஒன்றில் எனது விருப்பத்தை மீறி, வற்புறுத்தி எனக்கு தாலி கட்டிய சுப்பிரமணி அதன் பிறகு எனக்கு மனைவி நீ என்று கூறி, என்னிடம் உடல் ரீதியான உறவும் வைத்துக்கொண்டார்.

விபசாரம் செய்யவும் வற்புறுத்தல்

தற்போது என்னை விபசாரம் செய்ய வற்புறுத்தி தொல்லை கொடுக்கிறார். எனது மகளுக்கும் தொல்லை கொடுக்கிறார். மேலும் கொலை மிரட்டலும் விடுக்கிறார்.

அவரிடம் இருந்து மீட்டு, எனக்கும், எனது மகளுக்கும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பரமேஸ்வரிக்கு எங்கள் அமைப்பு சார்பில் உரிய பாதுகாப்பு கொடுப்போம், என்று பன்னாட்டு பெண்கள் அமைப்பின் தலைவர் செங்கொடி பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்