கட்டிலில் தள்ளி பாலியல் தொல்லை....! 13 வயது மாணவியை மிரட்டிய 5 பேர்....!
அம்பத்தூர் அருகே 13 வயது மாணவியை கட்டிலில் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அம்பத்தூர்,
செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை லாரி டிரைவராக உள்ளார். இவரது தாய் பிரிந்து சென்று விட்டார்.
இதனால் தனது 15 வயது அண்ணன் மற்றும் பாட்டியுடன் வசித்து வரும் சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் 5 பேர் கொண்ட போதை கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
குடிப்பழக்கம் கொண்ட எனது தந்தை அடிக்கடி வீட்டுக்கு வர மாட்டார். தாயும் வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் எனது அண்ணன்தான் என்னை படிக்க வைத்து வருகிறார்.
இந்த நிலையில் போதையில் வீட்டுக்கு வந்த 5 பேர் எனது அண்ணனை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் அவன் திருத்தணியில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சென்று விட்டான்.
இதனால் நான் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட 5 பேரும் கடந்த மாதம் 8-ந்தேதி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி 5 பேரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் என்னிடம் மிகவும் தகாத முறையில் நடந்து கொண்டனர்.
இதன் பிறகு கடந்த 2 மாதங்களாக போதை கும்பலைச் சேர்ந்த 5 பேரும் அடிக்கடி வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து தாங்க முடியாத அளவுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். 5 பேரும் என்னை கட்டிலில் தள்ளி விட்டு பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தனர். அவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நாங்கள் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டி வருகிறது.
எனவே என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொண்டிருக்கும் 5 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு 7-ம் வப்பு மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை கும்பல் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 பேரையும் அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விருதுநகர் கூட்டு பாலியல் விவகாரம் அடங்கும் முன்னர் செங்குன்றத்தில் மாணவி ஒருவருக்கு நிகழ்ந்துள்ள பாலியல் அத்துமீறல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.