தலைமுடியில் வர்ணம் அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு - கல்லூரி மாணவி தற்கொலை
தலைமுடியில் வர்ணம் அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் உள்ள கடப்பேரி திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவி (வயது 19). இவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர், சமீபத்தில் தனது தலைமுடிக்கு அழகுசேர்ப்பதற்காக ‘கலரிங்’ (வர்ணம்) செய்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற அவரை தலைமுடியில் வர்ணம் அடித்ததற்காக ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் கண்டித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக மாணவி ராகவியின் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர கூறியதாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து கல்லூரிக்கு வந்த மாணவியின் பெற்றோரிடம் இதுபோன்று தலைமுடியில் வர்ணம் அடித்து கொண்டு மகளை கல்லூரிக்கு அனுப்ப வேண்டாம் எனவும், இது சம்பந்தமாக மாணவிக்கு அறிவுறுத்துமாறு கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவி ராகவியை அவரது பெற்றோர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று மாலை வீட்டில் உள்ள அவரது அறைக்கு சென்ற நிலையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாணவியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.