வளர்ச்சி என்ற பெயரில் நம் தாய் பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு

வளர்ச்சி என்ற பெயரில் நம் தாய் பூமிக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-03-24 18:52 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேர் தாக்கல் செய்த மனுவில், “சட்டவிரோதமாக மணல் மட்டும் கனிம பொருட்களை கடத்தியதாக எங்கள் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்களை திருப்பி ஒப்படைக்க நாகை மாவட்ட சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது. எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது.

எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரிகள், பொக்லைகள், டிராக்டர்களுடன் இணைந்த லாரிகள், மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

வெயில், மழை என இயற்கை சீற்றங்களால் வாகனங்கள் பாதிக்கப்பட்டு சேதமடைந்து வருகிறது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, அவற்றை விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும்போது அந்த வாகனங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம்” என்று கூறியிருந்தனர்.

தாய் பூமி

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நமது தாய் பூமியை எந்த சேதமும் இல்லாமல் முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளனர். வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் பூமியில் உள்ள கனிம வளங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது. நம் தாய் பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக்கூடாது. சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதை காண முடிகிறது.

கடும் நடவடிக்கை

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, இந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட முடியாது. இந்த வாகனங்கள் பறிமுதல் தொடர்பான நடவடிக்கையை 6 மாதத்துக்குள் அரசு முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்