கலெக்டர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா
நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்ணா
திருக்கனூர் அருகே உள்ள தேத்தாம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபாபதி. விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த இடத்தை அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சபாபதி, அவர்களிடம் தனது இடத்தை ஒப்படைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அந்த இடத்தை ஒப்படைக்க மறுத்துள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த அவர், இன்று காலை தனது மனைவி சுசீலா மற்றும் உறவினர்களுடன் வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நுழைவாயிலில் அமர்ந்து குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது பற்றிய தகவல் அறிந்தவுடன் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கலெக்டர் இல்லாததால் அவர்களை வருவாய்த்துறை அதிகாரிகளை சந்திக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அவர்களிடம், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சபாபதி, தனக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் இங்கேயே தீக்குளிப்பேன் என்று கூறினார். அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.