தமிழகத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம் - அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டு உள்ளது

Update: 2022-03-23 23:52 GMT
சென்னை,

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் இதுவரை 5 கோடியே 32 லட்சத்து 99 ஆயிரத்து 355 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 50 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேர் முதல் தவணை தடுப்பூசியை கூட போடமல் உள்ளனர். தடுப்பூசி போடுவதில் மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதால் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் அரசு உள்ளது. 

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:- 

தமிழகத்தில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தற்போது தான் தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டது. அவர்களுக்கு விரைந்து தடுப்பூசி போடும் பணி நடைபெறும். அதேநேரம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போடாதவர்களை அடையாளம் கண்டு, முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

இதற்காக வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. 100 சதவீதம் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அடுத்துவரும் கொரோனா அலையை கண்டு பயப்பட வேண்டியிருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்