விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருமான வரி துணை கமிஷனர் கைது

விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருமான வரி துணை கமிஷனர் கைது சி.பி.ஐ. நடவடிக்கை.

Update: 2022-03-23 19:50 GMT
கோவை,

கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி தண்டபாணி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை ரூ.10 கோடிக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை வருமான வரித்துறை துணை கமிஷனர் டேனியல் ராஜ், நிலம் விற்பனை செய்த தண்டபாணியை அழைத்து, நிலம் விற்று கிடைத்த ரூ.10 கோடி வருமானத்திற்கு வருமான வரி விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், வரி விதிக்காமல் இருக்க தனக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இடைத்தரகராக தனியார் ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் என்பவர் செயல்பட்டுள்ளார். தண்டபாணி ரூ.5 லட்சத்திற்கு பதிலாக ரூ.2½ லட்சம் தர ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி தண்டபாணி சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் தண்டபாணியிடம் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்து உள்ளனர். இந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர், துணை கமிஷனர் டேனியல் ராஜ் கூறியதன்பேரில் ஆடிட்டர்கல்யாண் ஸ்ரீநாத்திடம் ரூ.50 ஆயிரத்தை வழங்கி உள்ளார். அப்போது மறைந்து இருந்த சி.பி.ஐ. போலீசார் டேனியல் ராஜ் மற்றும் கல்யாண் ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்