படகு தீ வைத்து எரிப்பு
ஆற்றங்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்கால் கோட்டுச்சேரியை அடுத்த வரிச்சிக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 38). இவர் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து மூலம் நண்டலாற்றின் கழுகுமேடு சட்ரஸ் முதல் சந்திரப்பாடி எல்லை வரை குத்தகைக்கு எடுத்து தனது சகோதரர் பாலகுமாரன் (35) மூலம் மீன் பிடித்து வருகிறார்.
இந்த எல்லைக்குள் கோட்டுச்சேரி வ.உ.சி.நகரை சேர்ந்த தினேஷ், கோபால், ஜெகஜீவராமன் மற்றும் சிலர் மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை பாலசுப்பிரமணியனும், பாலகுமாரனும் தட்டிக் கேட்டனர். மேலும் இங்கு மீன்பிடிக்க கூடாது என்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் ஆற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியனின் சிறிய படகு மற்றும் வலைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.