விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
விருதுநகரில் பட்டியலின இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது; -"விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் கண்காணிக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது" என்றார்.