கிருஷ்ணகிரியில் கோர விபத்து - 2 பேர் பரிதாப பலி
கிருஷ்ணகிரியில் பைக் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த முதலை முத்து என்பவரின் மகன் செந்தில் (வயது 42) என்பரும், கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை எம்.சி பள்ளி பகுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவர் மகன் ராஜசேகர் (வயது 43) ஆகிய இருவரும் பையூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காவேரிப்பட்டினம், டேம் ரோடு அருகே அவர்கள் பின்னால் வந்த டேங்கர் லாரி அவர்கள் மீது மோதியது. அதில் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டனம் போலீசார் உடலை கைப்பற்றி காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மீன் கடைகள் உள்ளது. இதனால் லாரி ஓட்டுநர்கள் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்திவிட்டு மீன் உணவு சாப்பிட செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் விபத்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு தீர்வு காணும் படி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.