கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் அமைச்சர் தகவல்

கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Update: 2022-03-22 21:49 GMT
சென்னை,

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர் மகேந்திரன் (மடத்துக்குளம்), ‘அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மும்முனை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறதா?' எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து கூறியதாவது:-

கடந்த ஆட்சியில் தேர்தல் அறிவிப்பு வருகின்ற நேரத்தில் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்கள். அதற்காக எந்தவொரு கட்டமைப்புகளும் அப்போது உருவாக்கப்படவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை.

ஆனால் இது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை என்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். எனவே மின்சாரம் வழங்க கட்டமைப்புகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

1 லட்சம் விவசாயிகளுக்கு...

தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளின் எண்ணிக்கையை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கரூர், தஞ்சை, திருவண்ணா மலையில் புதிய 3 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

மேலும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தில், இதுவரை 87,465 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காட்டு பன்றிகளை சுடுவதற்கு நடவடிக்கை-அமைச்சர் தகவல்

சட்டசபையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), காட்டு பன்றிகள் விவசாய பகுதிகளை மிகவும் மோசமாக்கி விடுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். தென்காசி தொகுதியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கிறது. எனவே காட்டுபன்றிகளை சுடுவதற்கு அரசாணை வெளியிடப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ‘விவசாய பகுதிகளில் காட்டு பன்றிகளின் அத்துமீறல்களை கருத்தில் கொண்டு காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான அனுமதி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. 2 மாதத்தில் அதற்கான அனுமதி பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

நிழல் ஊராகும் வேலூர்

தி.மு.க. உறுப்பினர் ப.கார்த்திகேயன் (வேலூர்) வேலூர் மலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படுமா? என்றும், வேலூரை நிழல் ஊராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பதில் அளித்து கூறியதாவது:-

2022-2023-ம் ஆண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மலை பகுதிகளில் மொத்தம் 75 லட்சத்து 94 ஆயிரத்து 900 மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் 23.96 சதவீத வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஆண்டுக்கு 32 கோடி மரங்கள் நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு முழுவதும் பசுமை தமிழகம் திட்டம் மூலம் 261 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்