ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசைக் கண்டித்து, 25-ந் தேதி பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசைக் கண்டித்து, 25-ந் தேதி பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாமலை அறிவிப்பு.

Update: 2022-03-22 21:38 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்தினாலே உன்னதமான தமிழ்நாடு கண்முன்னே உருவாகும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து உள்ளார்.

கல்விக்கடன் ரத்து, நகைக்கடன் ரத்து. குடும்ப பெண்களுக்கு ரூ.1,000 மாத ஊக்கத்தொகை, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைப்பு, சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 குறைப்பு என கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்ட மில்லாத பட்ஜெட் என்பதால் உன்னதமாகப் பார்க்கிறாரா?

ஆண்டுக்கு 1 லட்சம் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கை கழுவி இருக்கிறார்.

பெட்ரோல், டீசல் வருவாய் என்பது தமிழகத்திற்கே கிடையாது என்ற நிதி அமைச்சர் இப்போது ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளதை குறிபிட்டுள்ளதற்கு நன்றி.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்று தெரிவித்து, சூரிய ஒளி பம்பு, விவசாய உபகரணங்கள் இப்படித் தனித்தனியே எதோ புதிதாக உதவிகள் செய்வது போல் ஏற்கனவே மத்திய அரசின் உதவியோடு நடைபெறும் அதே மத்திய அரசின் திட்டத்தை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் நிரந்தரமாக உயர்த்திட உருப்படியான ஒரு அறிவிப்பும் இல்லை.

எனவே மக்களை திசை திருப்பும், ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்