புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் விஷம் குடித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் பிளேடால் கைகளை கீறியும் தற்கொலை முயற்சி; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் விஷம் குடித்தும், பிளேடால் கைகளை கீறியும் தற்கொலைக்கு முயன்றார். மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-03-22 19:07 GMT
புதுக்கோட்டை:
மாணவர் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை அருகே மேலூர் பகுதியில் அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் ஒருவர் கால்நடைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்தை (விஷம்) குடித்தார். மேலும் பிளேடால் தனது கைகளில் கீறியும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். பள்ளி வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்கொலைக்கு முயன்ற மாணவனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிளேடால் கீறியதில் மாணவனின் இடது கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. மாணவர் அருந்தியது விஷத்தன்மை அதிகம் கொண்டது இல்லை எனவும், கால்நடைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து தான் எனவும், அதனால் மாணவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வெள்ளனூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பள்ளி வளாகத்தில் மாணவர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவரின் இந்த விபரீத முடிவுக்கு காரணம் என்ன? என போலீசார் விசாரிக்கின்றனர். அதேநேரத்தில் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்