விருதுநகரில் இளம்பெண்ணை சீரழித்தவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்

விருதுநகரில் இளம்பெண்ணை சீரழித்தவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு.

Update: 2022-03-22 19:01 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களின் கோரிக்கையை பா.ம.க ஆதரிக்கிறது. இந்தப் போராட்டத்திற்காக சென்னைக்கு புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் ரெயில் நிலையங்களில், ஏதோ பயங்கரவாதிகளைப் போலக் கருதி காவல்துறை தடுத்து கைது செய்துள்ளது. சென்னையிலும் கைது வேட்டை தொடர்ந்தது. காவல்துறையினரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், “விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி மாணவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்து 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இளம்பெண்ணை சீரழித்த கொடியவர்களை போலீசார் கைது செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. மனிதநேயமின்றி, மிருகங்களைப் போன்று செயல்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்