மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இல்லாமல் எந்த சட்டத்தின்படி நளினிக்கு நேரடியாக ஜாமீன் கேட்க முடியும்?

மேல்முறையீட்டு வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாமல், நேரடியாக எந்த சட்டத்தின் அடிப்படையில் நளினிக்கு ஜாமீன் கேட்க முடியும்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2022-03-22 18:56 GMT
சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்தார். அதில், தீர்மானம் இயற்றிய மறுநாள் முதல் சிறையில் என்னை அடைத்திருப்பது சட்டவிரோதம். எனவே, கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் இதுகுறித்து முடிவு எடுக்கும் வரை தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஜாமீன்

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் முடிவு காணப்பட்ட பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம் எனக்கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளிவைத்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டு பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது என்று கூறி உத்தரவு நகலை தாக்கல் செய்தார். நளினி தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் நளினிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இயலாது

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்கலாம் அல்லது ஜாமீன் கேட்கலாம். தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அதை நிறுத்தி வைக்க கேட்கலாம். ஆனால், எந்த ஒரு மேல்முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாமல், நேரடியாக எந்த சட்டத்தின் அடிப்படையில் நளினிக்கு ஜாமீன் கேட்க முடியும்?.

சுப்ரீம் கோர்ட்டு அனைத்து கோர்ட்டுகளுக்கும் மேலான கோர்ட்டு. இந்த வழக்கில் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க இயலாது. மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர். பின்னர் நளினி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று விசாரணையை நாளைக்கு(வியாழக்கிழமை) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்