போலியான லேபிள் ஒட்டி டீத்தூள், சலவை பவுடர் விற்றவர் கைது
போலியான லேபிள் ஒட்டி டீத்தூள், சலவை பவுடர் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பெரிய மார்க்கெட், ரங்கபிள்ளை வீதி, பாரதிவீதியில் செயல்படும் 3 கடைகளில் பிரபல நிறுவனத்தின் பேரில் போலி டீத்தூள், சலவை பவுடர் விற்பனை செய்வது தெரியவந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகரான பெங்களூருவை சேர்ந்த நயன்தாரா டெமி பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான லேபிள் ஒட்டி டீத்தூள், சலவை பவுடர் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி லேபிள் ஒட்டிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பெரியகடை போலீசார் விசாரணை நடத்தியதில் புதுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் கண்ணன் (வயது 38) என்பவர் பிரபல நிறுவனத்தின் பேரில் போலியான லேபிள் ஒட்டி பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரது குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.