நூதன முறையில் பெண்ணிடம் தங்க செயின் அபகரிப்பு - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
உடுமலை அருகே நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாகக்கூறி பெண்ணிடம் 4 பவுன் தங்க செயினை அபகரித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர்,
உடுமலை அருகே நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாகக்கூறி பெண்ணிடம் 4 பவுன் தங்க செயினை அபகரித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தங்க செயினுக்கு பாலீஸ்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள ஜோதிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 66). தனியார் மில்லில் பிட்டராக வேலை செய்து வருகிறார். சம்பவ தினமான நேற்று வீட்டில் நடராஜ், அவரது மனைவி, மகன் ஆகியோர் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர், பாத்திரம், வளையல் ஆகியவற்றிற்கு பாலீஸ் போட்டுத்தருவதாகக் கூறியுள்ளார்.
அதனால் நடராஜின் மனைவி, தான் கையில் அணிந்திருந்த கவரிங் வளையலை கழற்றி கொடுத்துள்ளார். அந்த கவரிங் வளையல் பளிச்சென்று ஆனது. அப்போது அங்கு மற்றொரு மர்ம நபர் வந்துள்ளார். அவரிடம் நடராஜ் நீங்கள் யார் என்று கேட்டதற்கு, அந்த மர்ம நபர் சூப்ரவைசர் என்றதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நடராஜின் மனைவி, தான் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பாலீஸ் போட்டு தருவதற்காக கழற்றி கொடுத்துள்ளார். அதை வாங்கிய அந்த மர்மநபர் குக்கரில் தண்ணீர் எடுத்து வரும்படி கூறியுள்ளார். அதை கொண்டு வந்ததும், அந்த குக்கரில் அந்த மர்மநபர் பவுடரை போட்டுள்ளார். உடனே அந்த தண்ணீர் சிகப்பு கலராக மாறியுள்ளது. பின்னர் அந்த குக்கரை சிறிது நேரம் அடுப்பில் வைக்கும்படி கூறிவிட்டு, அந்த மர்ம நபர்கள் இருவரும், ஏற்கனவே அங்கு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.
2 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்நிலையில் அந்த செயின் குக்கருக்குள் இருக்கும் என்று பார்த்த போது செயினை காணவில்லை. அந்த மர்மநபர்களை தேடியும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து நடராஜ் உடுமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையொட்டி உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 2 மர்ம நபர்களையும் தேடிவருகின்றனர்.