சென்னை எழிலகம் முன் போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தடுத்து நிறுத்தம்...!
உதவி தொகை உயர்த்தி வழங்ககோரி எழிலகத்தை முற்றுகையிட போவதாக மாற்றுதிறனாளிகள் அறிவித்திருந்தனர்.
சென்னை,
தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில், உதவி தொகை உயர்த்தி வழங்குமாறு வலியுறுத்தி சென்னை எழிலகம் முன்பு இன்று தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சங்கத்தின் உறுப்பினர்கள் சென்னைக்கு வர தொடங்கினர்.
இந்நிலையில் இன்று காலை சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏராளமான மாற்றுதிறனாளிகள் ஒன்று திரண்டனர், இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் உதவி தொகைக்கான ரூபாய் ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாகவும், அதேபோல் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை ரூபாய் 1500-ல் இருந்து 5000 ஆக உயர்த்தக் கோரி தலைமை செயலகத்தில் "கோட்டையில் குடியேறும் போராட்டம்" நடத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்டோர் வந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்த மாற்று திறனாளிகள் அனைவரையும் பஸ் நிலைய வளாகத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.