ஆயில் நிறுவன அதிகாரி வீட்டில் 14 பவுன் நகை, பணம் திருட்டு
காரைக்கால் அருகே ஆயில் நிறுவன அதிகாரி வீட்டில் 14 பவுன் நகை, பணம் திருடிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால் அருகே ஆயில் நிறுவன அதிகாரி வீட்டில் 14 பவுன் நகை, பணம் திருடிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
ஆயில் நிறுவன அதிகாரி
காரைக்காலை அடுத்த நெடுங்காடு ராஜா வீதியை சேர்ந்தவர் சுசீந்திரன் (வயது 47). இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக சுசீந்திரன் தனது குடும்பத்துடன் திருவாரூர் சென்றார். பின்னர் அங்கு திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இன்று அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது. இதை பார்த்து சுசீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சித்தி வீட்டில் கைவரிசை
இதுபற்றி நெடுங்காடு போலீசில் சுசீந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினார். சுசீந்திரனின் மனைவியின் அக்கா மகனான பக்கத்து வீட்டில் வசிக்கும் மரைன் என்ஜினீயர் பிரசாந்த் ராஜ் (வயது22) மற்றும் சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் துருவித்துருவி விசாரித்தனர்.
இதில் பிரசாந்த்ராஜ், தனது சித்தி வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. படித்து விட்டு வேலை கிடைக்காததால், செலவுக்காக சித்தி வீட்டில் பணம், நகை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து பிரசாந்த் ராஜை போலீசார் கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.