வெகு விமர்சையாக நடைபெற்ற முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாண வைபோகம்..!

திருப்பரங்குன்றத்தில் அரோகரா கோஷம் முழங்க மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் அருள் பார்வையில், முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண வைபோகம் வெகுவிமர்ச்சியாக நடந்தது.

Update: 2022-03-21 11:30 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் நேரடி அருள் பார்வையில் முருகப்பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாண வைபோகம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அட்சதை தூவி அரோகரா கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமான்

முருகப்பெருமான் குடிகொண்டு அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனிப் பெருவிழா பதினைந்து நாட்கள் வெகு விமர்ச்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாஷேகம் நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக இன்று முருகப்பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாண வைபோகம் கோலாகலமாக நடந்தது.

சர்வ அலங்காரம்

இதனையொட்டி இன்று அதிகாலை 5 மணியளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகை அணிகலன்களாலும், புத்தம் புதிய பட்டாடைகளாலும், வாசனை கமலும் வண்ண மலர்களாலும் மணக்கோல மகா அலங்காரம் செய்யப்பட்டது.

இதனையடுத்து மணக்கோல அபிஷேகம் ஆராதனை நடந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டு சன்னிதி தெரு வழியாக பசுமலை மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு சென்றார். இதேவேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனியாக பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றம் நோக்கி வந்தனர். 

தாய்-தந்தை வரவேற்பு

இந்த நிலையில் காலை 7.40 க்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முருகப் பெருமான் தனது தாய் தந்தையான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை வரவேற்றார். இதன் பின் சந்திப்பு மண்டபத்துக்குள் எழுந்தருளிய சுவாமிகளுக்கு சமகாலத்தில் தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து சுவாமிகள் புறப்பட்டு ஒன்றின் பின் ஒன்றாக திருப்பரங்குன்றம் கோவில் நோக்கி புறப்பட்டு வந்தன. வரும் வழியில் வழிநெடுகிலுமாக ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்த திருக்கண்களில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

திருக்கல்யாணம்

இந்த நிலையில் கோவிலுக்குள் மணமேடையான 6 கால் மண்டபத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினார். பின்பு மீனாட்சி அம்மனும் மேடையில் எழுந்தருளினார். 

இதனையடுத்து தெய்வானையுடன் முருகப்பெருமான் மேடைக்கு வந்தார். மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு திருமண சம்பிரதாய சடங்குகள் யாவும் நடந்தது. முருகப்பெருமானின் பிரதிநிதியாக சங்கர் பட்டரும், தெய்வானையின் பிரதிநிதியாக ரமேஷ் பட்டரும் இருந்து சுவாமிக்கும் அம்மனுக்குமாக பட்டு ஆடைகள் அணிவித்து, பூமாலைகள் சூடினார்கள்.

இந்த நிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் ஆகியோர்களது நேரடி அருள் பார்வையில் பகல் 12.55 மணிக்கு முருகப்பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இதனை தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு மகா தீபாராதனை நடந்தது. அவை மெய்சிலிர்க்கும் படியாக கண்கொள்ளா காட்சியாக அமைந்து இருந்தது. 

திருமுருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் முடிந்ததும் சுமங்கலிப்பெண்கள் தங்களது கழுத்தில் புதிய தாலி கயிறுமாற்றிக் கொண்டனர். பெரும்பாலான பக்தர்கள் மொய் எழுதினார்கள். 

பூப்பல்லக்கு


இதன்பின் இரவு 7 மணியளவில் 16 கால் மண்டபம் அருகே பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். இதேவேளையில் சர்வ அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின் அங்கிருந்து பிரியாவிடை பெற்று தங்களது இருப்பிடத்திற்கு செல்வர்.

மேலும் செய்திகள்