மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

Update: 2022-03-21 09:58 GMT
கோப்புப் படம்
சென்னை,

மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தில், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் மேகதாது சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை, அரசினர் தனித் தீர்மானமாகக் கொண்டுவந்து, அவரே முன்னுரையாக வரலாற்றிலே பதிவாகியிருக்கக்கூடிய பல்வேறு செய்திகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, கட்சி பேதமின்றி, அரசியல் பேதமின்றி இந்தத் தீர்மானத்தை நாம் ஏகமனதாக நிறைவேற்றிட வேண்டுமென்ற அந்த அடிப்படையிலே, ஒரு தீர்மானத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்கள்.

அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததற்குப் பிறகு, அதைத் தொடர்ந்து உரையாற்றியிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று, இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிட, இந்த அரசுக்கு ஆதரவு தந்தமைக்கு முதலில் உங்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றியைத்  தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  

மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 

நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும்.  அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் இந்த அரசு நிச்சயமாக உறுதியாக இருக்கும். அதிலே எந்தவித பாகுபாடும் பார்க்கமாட்டோம்.  

அணை கட்டக்கூடிய முயற்சிகளை இந்த அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும்.  தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர்களின் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும்.  தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்; நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்