பனையூரில் சொகுசு விடுதியில் விடிய, விடிய மது விருந்து இளம்பெண்கள் உள்பட 500 பேர் சிக்கினர்

சென்னையை அடுத்த பனையூரில் சொகுசு விடுதியில் விடிய, விடிய மது விருந்தில் ஈடுபட்ட என்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் உள்பட 500 பேர் போலீசில் சிக்கினர்.

Update: 2022-03-20 22:53 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிகளில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இளம்பெண்கள் நடனத்துடன் மது விருந்து நடப்பது கொரோனாவுக்கு பிறகு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. தாம்பரம் மாநகர போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி விதிமுறைகளை மீறி மது விருந்து நடத்தும் ஓட்டல்கள், விடுதிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் உத்தண்டி அடுத்த பனையூர் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய இளம்பெண்கள் நடனத்துடன் மதுவிருந்து நடைபெறுவதாகவும், அதில் இளம்பெண்கள் உள்பட 500 பேர் கலந்து கொண்டு மதுபோதையில் நடனமாடி வருவதாகவும் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் கானத்தூர் போலீசார் விரைந்து சென்று அந்த விடுதியில் சோதனை செய்தனர்.

என்ஜினீயர்கள், இளம்பெண்கள்...

அப்போது அந்த விடுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், வாலிபர்கள் மது போதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மது விருந்தில் பங்கேற்ற அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் இருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருபவர்கள், கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் ஆவார்கள். ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி மது விருந்தில் ஈடுபட்டது போலீசாரையே அதிர்ச்சியடைய செய்தது.

எச்சரித்து அனுப்பினர்

இதையடுத்து தாம்பரம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் ரவி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மது விருந்தில் பங்கேற்று பிடிபட்ட அனைவருடைய தகவல்களையும் போலீசார் சேகரித்து பதிவு செய்தனர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் தனியாக அமர்ந்து மது விருந்தில் பங்கேற்றவர்களிடம் அவர்களின் விவரங்களை கேட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.

பின்னர் இளம்பெண்கள் உள்பட அனைவரையும் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். விடுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்கள், கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுவிருந்து நடத்திய விடுதி மேலாளர் சைமனை போலீசார் கைது செய்தனர். மேலும் சொகுசு விடுதி மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பனையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்