கடற்கரை காந்திசிலை சுத்தம் செய்யப்படுமா

பறவைகள் எச்சத்தால் அசுத்தமடைந்துள்ள காந்தி சிலையை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-20 17:47 GMT
பறவைகள் எச்சத்தால் அசுத்தமடைந்துள்ள காந்தி சிலையை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காந்தி சிலை
புதுச்சேரி கடற்கரை சாலையில் தற்போதுள்ள காந்திசிலையின் பின்புறம் 1862-ம் ஆண்டு துறைமுக பாலம் அமைக்கப்பட்டது. 1952-ம் ஆண்டு வீசிய கடல் சூறாவளியில் சிக்கி இந்த பாலம் சின்னாபின்னமானது. அதன் பிறகு புதுவையில் சரக்கு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சீகல்ஸ் ஓட்டலுக்கு பின்புறம் துறைமுக பாலம் அமைக்கப்பட்டது.
இதற்கிடையே அகிம்சை வழியில் போராடி நாட்டுக்கு சுந்திரம் வாங்கித்தந்த தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் புகழை பறைசாற்றும் வகையில் 1.9.1965 அன்று கடற்கரை சாலையில் பழைய துறைமுக பாலம் இருந்த இடத்தில் 13 அடி உயரத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது. இது புதுச்சேரி கடற்கரையின் அடையாளமாக உள்ளது.
அசுத்தம்
ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் நினைவு தினத்தில் அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் குடியரசு தின விழா, சுதந்திர தின விழாவின்போது வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம்.
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கடற்கரைக்கு செல்வது வழக்கம். அதிலும் பெரும்பாலானோர் காந்திசிலை அருகில் இருந்து புகைப்படம் எடுத்து கொள்வது வழக்கம். ஆனால் தற்போது அவரது சிலையின் தலை மீது பறவைகள் உட்கார்ந்து போட்ட எச்சம் காய்ந்தபடி அப்படியே உள்ளது. இதனால் காந்திசிலை அசுத்தம் அடைந்து காணப்படுகிறது.
சுத்தம் செய்ய வேண்டும்
சேதப்பிதா சிலைக்கே இந்தநிலை என்றால் மற்ற தலைவர்களின் சிலை எந்த வகையில் இருக்கும் என்று சுற்றுலா பயணிகள் வேதனை அடைகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காந்தி சிலையை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்