திருவண்ணாமலை: இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; 2 வாலிபர்கள் உயிரிழப்பு...!

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-03-20 06:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வெளுங்கனந்தல் கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் மகன் தினேஷ் (வயது 26). சொர கொளத்தூர்  பகுதியை சேர்ந்த ரேணு மகன் முத்துக்குமார் (37).

இவர்கள் இருவரும் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி செடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்காக நேற்று மதியம் ஒரே இருசக்கர வாகனத்தில் கீழ்பென்னாத்தூர் சென்றனர்.

அங்கு பூச்சிக் கொல்லி மருந்து வாங்கிவிட்ட இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அரசம்பட்டு அரச மரம் அருகில் வந்த போது எதிரில் திருவண்ணாமலையில் இருந்து வேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் தினேசும், முத்துக்குமாரும் பலத்த காயம் அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு அம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கடம்பை கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் உஸ்மான் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்