அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி ?
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் - டிசம்பர் 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.
ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் " ஓப்பன் புக் தேர்வு " நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இந்த தேர்வில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கிய இந்த தேர்வுகள் கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்தது.
இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடை தாள்களை சமர்பிக்காத காரணத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டு இருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் தேர்வில் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.