அழிந்து வரும் இனத்தை பாதுகாக்க வலியுறுத்தி 400 கிலோ தானியங்களால் உருவான சிட்டுக்குருவி ஓவியம் கல்லூரி மாணவர் அசத்தல்
அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவியை பாதுகாக்க வலியுறுத்தி 400 கிலோ தானியங்களை கொண்டு சிட்டுக்குருவி ஓவியத்தை வரைந்து கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார்.
அரியாங்குப்பம்,
அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவியை பாதுகாக்க வலியுறுத்தி 400 கிலோ தானியங்களை கொண்டு சிட்டுக்குருவி ஓவியத்தை வரைந்து கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார்.
சிட்டுக்குருவி தினம்
சிறிய உருவம், சிறந்த அழகும் கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்த பறவை சிட்டுக்குருவி. மக்களுடன் இணைந்தே வாழ்ந்ததால் ஊர்க்குருவி என்றும், மனைக்குருவி என்றும் அழைக்கப்படும்.
வீடுகளில் இறக்கையை விரித்து கொண்டு கீச், கீச் என்ற இசை ஒலியை எழுப்பும் சிட்டுக்குருவிகளின் சத்தம் தற்போது கேட்பது என்பதே அரிதாகி விட்டது. அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க மார்ச் 20-ந்தேதி சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்படுகிறது.
சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கும் பொருட்டு, தவளக்குப்பம் அடுத்த அபிஷேகபாக்கம் அரசு பள்ளி மைதானத்தில் சிட்டுக்குருவியின் பிரமாண்ட ஓவியத்தை வரைந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவர் அசத்தியுள்ளார்.
400 கிலோ தானியம்
வில்லியனூர் பிள்ளையார்குப்பம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 18). இவர் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். ஓவியத்தின் மீது தீராத காதல் கொண்ட அவர், உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிட்டுக்குருவியின் ஓவியத்தை வரைய முடிவு செய்தார்.
இதற்காக அபிஷேகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் 32 ஆயிரத்து 500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களை கொண்டு 125 அடி அகலம், 260 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான சிட்டுக்குருவியின் ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.
பாராட்டு
காலை 10 மணி அளவில் தொடங்கிய அவர் மாலை 6 மணிக்குள் வரைந்து முடித்தார். இதற்காக அரிசி, கோதுமை, உளுந்து, பச்சை பயிறு என 400 கிலோ தானியங்களை தூவி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். மாணவரின் இந்த முயற்சியை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழ் வழங்க இருக்கிறது.
மாணவரின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவர் உருவாக்கிய இந்த சிட்டுக்குருவி ஓவியத்தை பார்த்து பொதுமக்களும் அதிசயித்துள்ளனர்.
பாதுகாக்க வேண்டும்
இதுகுறித்து மாணவர் வினோத் கூறுகையில், ‘சிட்டுக்குருவிகள் கூடு இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவு சிட்டுக்குருவிகள் இருந்தன. இப்போது சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருகிறது. தற்போது இந்த பறவைகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டேன். சிட்டுக்குருவிக்கு உணவளிப்பதோடு, அதனை பாதுகாக்க வேண்டும்.
பறவைகள் இருந்தால் இயற்கை இருக்கும். இயற்கை இருந்தால் மனித இனமும் செழிப்படையும். எனவே பறவை இனங்களை பாதுகாக்க ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்’ என்றார்.
இதற்கிடையே அமைச்சர் லட்சுமி நாராயணன் சிட்டுக்குருவி ஓவியத்தை நேரில் பார்வையிட்டு சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவரை பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.