சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்..!
வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
நெல்லை,
வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
தென்கரை மகாராஜேஸ்வரர்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே நம்பியாற்றின் தென்கரையில் சித்தூர் என்ற கிராமம் உள்ளது. இவ்வூரில் சாந்தமே உருவாக சத்தியமே வடிவமாக கொண்டு தென்கரை மகாராஜேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். சாஸ்தா கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயில் ஆகும்.
தென்மாவட்டங்களில் குடும்பகோயில் வழிப்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது இக்கோயிலாகும். இக்கோயிலில் நடக்கும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி மாதம் நடக்கும் உத்திர திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பெயருக்கு ஏற்றார் போல் சித்தூர் சிறிய ஊராக இருந்தாலும் பங்குனி உத்திரம் திருவிழா நாளில் பக்தர்கள் கூட்டத்தினால் சித்தூர் கிராமமே களை கட்டி காணப்படும்.
தேரோட்டம்
ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவானது இந்தாண்டு கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேக பூஜையும், மதியம் கும்பாபிஷேக தீபாரதனை பூஜையும் பின்னர் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று காலை 11.05 மணிக்கு தென்கரை மகாராஜேஸ்வரர் சுவாமி தேரில் எழுந்தருளினார். பின்பு பக்தர்கள் தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். சாஸ்தா கோயில்களில் தேரோட்டம் நடப்பது நெல்லை மாவட்டம் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயிலில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தேர் நிலையம் வந்த பின்பு குதிரை ஓட்டம் நடந்தது.
இத்திருவிழாவில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் ஆய்வாளர் கார்த்திகேஸ்வரி, தக்கார் விஜயா, செயல் அலுவலர் சாலைலட்சுமி மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்ட் (பொறுப்பு) பர்னபாஸ், தலைமையிலான போலீசார் மேற்கொண்டனர்.