போலாம் ரைட் ....! அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் பஸ்சில் பயணித்த கோவை கலெக்டர்
அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுடன் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பஸ்சில் பயணம் செய்தார்.
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 'போலாம் ரைட்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் 50 பேர் பங்கேற்று கலெக்டர் உடன் கலந்துரையாடல் நடத்தினர்.
அப்போது மாணவர்கள் தங்கள் உயர்கல்வி படிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கலெக்டரிடம் கேட்டு அறிந்தனர். தொடர்ந்து கலெக்டரும் அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் சளைக்காமல், பொறுமையாகவும் அமைதியாகவும் பதிலளித்தார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கலெக்டர் தனியார் பஸ் மூலம் மாணவ- மாணவிகளுடன் இருக்கையில் அமர்ந்து எளிமையாக பயணம் மேற்கொண்டார்.
பஸ் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சியியல் அருங்காட்சியகத்துக்கு சென்றது அங்கு மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பூச்சிகள் குறித்து விளக்கினார். அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலெக்டர் எளிமையாக பஸ்சில் பயணம் செய்தது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.