புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாநகராட்சிகளுக்கு தலா ரூ.10 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

தாம்பரம், காஞ்சீபுரம் உள்பட 6 மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பை உருவாக்க தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-18 23:12 GMT
சென்னை,

திடக்கழிவு மேலாண்மை உள்பட, முழுமையான சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான, 2-வது தூய்மை இந்தியா இயக்கம், மத்திய அரசின் நிதி உதவியுடன் அரசால் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மாநிலப் பங்கீடாக ரூ.2,169 கோடியுடன் மொத்தமாக ரூ.5,465 கோடி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொடுங்கையூரில் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் ‘பயோ-மைனிங்’ முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

6 மாநகராட்சிகளுக்கு தலா ரூ.10 கோடி

அம்ருத் 2.0 திட்டத்திற்கான ஒட்டுமொத்த திட்டமதிப்பு சுமார் ரூ.13 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் பங்களிப்பின் வாயிலாக இத்திட்டத்தின் மூலம் பல்வேறு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்களை அரசு செயல்படுத்தும். இம்மதிப்பீடுகளில் அம்ருத் திட்டத்திற்கு ரூ.2,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தாம்பரம், காஞ்சீபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு, தலா ரூ.10 கோடி என மொத்தம் ரூ.60 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும்.

28 நகராட்சிகளுக்கு தலா ரூ.2 கோடி

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா ரூ.2 கோடி என மொத்தம் ரூ.56 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும்.

200 ஆண்டுகளுக்கு முன் 1822-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜான் சல்லீவன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்டதே இன்றைய நீலகிரி மாவட்டத்தின் தலைமையிடமான உதகை நகரமாகும். இதனை நினைவுகூறும் வகையில் சிறப்புத் திட்டங்களும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ள ரூ.10 கோடி சிறப்பு நிதி வழங்கப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்