தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தண்ணீருக்கு தட்டுப்பாடு
தர்மபுரி மாவட்டம் சாமண்டஅள்ளி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீரை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சாமண்டஅள்ளி, தர்மபுரி.
மாணவர்கள் ஆபத்தான பயணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் கே.திப்பனப்பள்ளி அருகே அரசு மேல்நிலைபள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் பள்ளி முடியும் வேளையில் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடியே ஆபத்தான பயணம் செய்கிறார்கள். சில நேரங்களில் மாணவர்கள் பஸ்சில் இருந்து கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி அந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கே.திப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி
அறிவிக்கப்படாத மின்வெட்டு
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட தட்டாரத்தெரு, பெரியண்ணன் தெரு, கொல்லம்பட்டறை தெரு, குட்டைத்தெரு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் இரவு 7 மணிக்கு தான் மீண்டும் மின்சாரம் வந்தது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் சுமார் 9 மணி நேரம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அதிகாரபூர்வமாக மின்நிறுத்தம் அறிவிக்கப்படும் நாட்களில் கூட காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படும். ஆனால் நேற்று முன்தினம் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி 9 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் வயதான முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர். இனிவரும் காலங்களில் இதுபோன்று எவ்வித முன்அறிவிப்பும் இன்றி மின்சாரத்தை துண்டிப்பதை மின்வாரியம் தவிர்க்க வேண்டும்.
-ஜோதிமலர், நாமக்கல்.
பெயர் பலகை வைக்க வேண்டும்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா செம்மாண்டப்பட்டி கிராமத்தில் 8-வது வார்டு பகுதியில் காட்டுவளவு அம்பேத்கர் நகரில் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் தபால்காரர் மூலம் தபால்கள் சரியாக வருவதில்லை. வெளியூர்களில் இருந்து வரும் பொது மக்களுக்கும் சரியான முகவரி தெரிவது இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த ஊருக்கு பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுருளி, செம்மாண்டப்பட்டி, சேலம்.