நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...!

நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-03-18 16:11 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம், சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன் என்கிற வேல்ராஜ் (வயது 50). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர் தனது தாயார் மல்லிகாவுடன் சிக்கல் வடக்கு வீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். 

வீட்டில் கொள்ளை

இந்த நிலையில் கடந்த15-ந்தேதி நாகலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு தாயாருடன் கோவில் விழாவிற்காக வேளாங்கண்ணி அருகே பூவத்தடி கிராமத்துக்கு சென்று உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காலை நாகலட்சுமி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும்  ஒருவர்,  அவருக்கு போன்  செய்து வீட்டில் மின்விளக்கு எரிவதாகவும், பின் பக்க கதவு  உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை  கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி உடனே வீட்டுக்கு வந்து பார்த்த போது   வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது   அறைகளில் இருந்த  3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த   39 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த டி.வி. உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. 

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன்  துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன்,  கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.  நாகையில் இருந்து கைரேகை  நிபுணர்கள் வந்து கொள்ளை நடத்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். 

நாகையில் இருந்து போலீஸ் மோப்பநாய் ரியோ வரவழைக்கப்பட்டு, அது  கொள்ளை நடந்த வீட்டில் இருந்து வடக்குவீதி வழியாக சென்று சிக்கல் மெயின் ‌‌ரோட்டில் உள்ள மரியம்மன் கோவில் அருகே நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 

இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து  மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்