பள்ளி மாணவர்கள் சாலை மறியல்; கை கூப்பி கும்பிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்...!
பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கைவிடுவதற்காக கை கூப்பி கும்பிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்.
நெமிலி,
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த மேல் வீராணம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாததை கண்டித்தும் பாதுகாப்பான வகுப்பறைகள் இல்லாததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து பாணாவரம்-காவேரிப்பாக்கம் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களிம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தயவு செய்து சாலை மறியலை கைவிட்டு பள்ளிக்கு செல்லுங்கள் என்று பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கை கூப்பி கும்பிட்டு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பள்ளி மாணவர்கள் கலைந்து சென்றனர்.
மாணவர்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.