தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனில் காத்திருக்கும் 5 சட்ட மசோதாக்கள்

தமிழக கவர்னரின் ஒப்புதலை பெற ராஜ்பவனில் காத்திருக்கும் 5 சட்ட மசோதாக்கள் எவை? என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2022-03-17 23:55 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் மக்களின் தேவைக்கு ஏற்ப சட்டத்திருத்தங்களை செய்யவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் அரசு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்கிறது. இந்த மசோதாக்களை சட்டசபையில் அரசு அறிமுகம் செய்கிறது. பின்னர் அவற்றை ஆய்வுக்கு எடுத்து, அதில் எதிர்க்கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகளின் கருத்துகளை பெறுவதற்காக எம்.எல்.ஏ.க்களின் விவாதம் அனுமதிக்கப்படுகிறது. மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அவற்றை குரல் வாக்கெடுப்புக்கு விட்டு, அதன் அடிப்படையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

அந்த வகையில், தற்போதைய தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் பல சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த சட்ட மசோதாக்களுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியமுள்ள மசோதாக்களை ஜனாதிபதியின் பார்வைக்கு கவர்னர் அனுப்பியுள்ளார்.

5 மசோதாக்கள் எவை?

ஆனால் தற்போது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலை பெறுவதற்காக 5 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:-

பத்திர பதிவுக்கான தமிழ்நாடு திருத்த சட்ட மசோதா-2021 மற்றும் பத்திர பதிவுக்கான தமிழ்நாடு 2-ம் திருத்த சட்ட மசோதா-2021. இந்த சட்ட மசோதாக்கள் 2.9.2021 அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாரதியார் பல்கலைக்கழக திருத்த சட்டமசோதா-2021 கடந்த 13.9.2021 அன்று நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள் 2-ம் திருத்த சட்ட மசோதா, 8.1.2022 அன்று நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீண்டு செல்லும் ‘நீட்’

‘நீட்’ தேர்வை விலக்குவது தொடர்பான, தமிழ்நாடு இளநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை சட்ட மசோதா-2021, ஏற்கனவே சட்டசபையில் கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் 13-ந்தேதி சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டு, அனைத்து கட்சியினராலும் விவாதிக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அன்றே அனுப்பி வைக்கப்பட்டது.

புதிய கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி பதவி ஏற்றார். ஆனால் மாணவர் நலனும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்த இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல், சபாநாயகருக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார்.

இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த மாதம் (பிப்ரவரி) 9-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.

போகப்போக தெரியும்

அதில் ‘நீட்’ தேர்வு தொடர்பான அந்த சட்ட மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு மீண்டும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஜனாதிபதியிடம் கவர்னர் அனுப்பி வைக்காத நிலையில், சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்திலும் அந்த சட்ட மசோதா குறித்து தி.மு.க. சார்பில் கருத்து கூறப்பட்டுள்ளது. இதில் என்ன முடிவை கவர்னர் எடுக்க இருக்கிறார்? என்பது போகப்போக தெரியும்.

மேலும் செய்திகள்