இந்தியில் பேசிய மந்திரியை, ஆங்கிலத்தில் பேச வைத்த கனிமொழி

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக இந்தியில் பேசிய மந்திரியை, கனிமொழி ஆங்கிலத்தில் பேச வைத்தார். இதனால் சக உறுப்பினர்கள் அவரை பாராட்டினர்.

Update: 2022-03-17 18:54 GMT
சென்னை,

நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில், நாடாளுமன்ற தி.மு.க. குழு துணைத்தலைவர் கனிமொழி பேசும்போது, “தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கி வருகிறோம். இந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின்கீழ் புலம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான செலவை மாநில அரசு ஏற்க வேண்டுமா?, மத்திய அரசு ஏற்க வேண்டுமா? பொது வினியோக திட்டம் என்பது மாநில அரசின் கீழ் வருவது. அதனால் இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை மத்திய அரசு தெளிவுபடுத்தவேண்டும்” என்றார்.

ஆங்கிலத்தில் பதில்

இதற்கு உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்து இந்தியில் பேசத் தொடங்கினார். அப்போது கனிமொழி எம்.பி. குறுக்கிட்டு, “நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டேன். மந்திரிக்கு ஆங்கிலம் மிக நன்றாக தெரியும். ஆங்கிலத்திலேயே பதில் சொல்லுங்கள். இந்தியில் எதற்கு பதில் சொல்கிறீர்கள்?” என்று கூறினார்.

அதற்கு, பியூஸ் கோயல், “மொழிபெயர்ப்பு வசதி இருக்கிறதே” என்று கூறினார். இதையடுத்து பியூஸ் கோயல் “கனிமொழியை நான் மதிக்கிறேன். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “புலம்பெயர்ந்த மக்களுக்கான ரேஷன் பொருட்களுக்கான செலவை 100 சதவீதம் மத்திய அரசே ஏற்கும்” என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார். இந்தியில் பேசத் தொடங்கிய மந்திரியை ஆங்கிலத்தில் பதிலளிக்க வைத்த கனிமொழியை சக உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்