தலைமறைவாக இருந்த சென்னை வாலிபர் பிடிபட்டார்
500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த வாலிபர் பிடிபட்டார். அவரது வீட்டில் இருந்து நவீன எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த வாலிபர் பிடிபட்டார். அவரது வீட்டில் இருந்து நவீன எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ள நோட்டுகள்
புதுவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான மோகன்கமல், சென்னையை சேர்ந்த பிரதீப்குமார் உள்பட 5 பேரை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை எண்ணூரை சேர்ந்த ரகு (வயது 30) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே கள்ளநோட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மோகன்கமல், பிரதீப்குமார் ஆகிய 2 பேரையும் உருளையன்பேட்டை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சென்னையில் உள்ள ரகுவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
நவீன எந்திரங்கள் பறிமுதல்
அப்போது அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய நவீன எந்திரங்கள், ஜெராக்ஸ் மிஷின், கட்டிங் மிஷின், பச்சைகோடு வரையும் மிஷின் மற்றும் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து ரகுவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர் அங்குள்ள கடற்கரை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) அவரை புதுவைக்கு அழைத்துவர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வரும் மோகன்கமல், பிரதீப்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.