”உங்க வீட்டுக்கு வந்தால் சோறு போடுவீர்களா...?” - மாணவிகளிடம் கேட்ட முதல்-அமைச்சர்
உங்க வீட்டுக்கு வரும் போது சாப்பாடு போடுவிங்களா'' என மாணவிகளிடம் முதல்-அமைச்சர் வீடியோ காலில் கலந்துரையாடினார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடியை சேர்ந்த சேர்ந்த மாணவிகளை நேற்று தலைமை செயலகத்துக்கு அழைத்து பேசினார்.
இதைதொடர்ந்து பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், அந்த மாணவிகளின் இருப்பிட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச வைத்தார்.
செல்போன் வீடியோ காலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அந்த மாணவிகள் பேசும்போது, ‘‘நீங்கள் நேற்று எங்கள் மாணவிகளை பார்த்து பேசியது ரொம்ப சந்தோஷம். அதோடு எங்கள் வீடுகளுக்கு வந்து பார்த்தால் இன்னும் ரொம்ப சந்தோஷப்படுவோம்’’ என்றனர்.
இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறுகையில், ‘‘நான் ஒரு வாரத்தில் அங்கு வருகிறேன். நாளையும், நாளை மறுநாளும் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அதை முடித்துவிட்டு வந்து பார்க்கிறேன்’’ என்றார்.
இந்த பதிலை கேட்டதும் அந்த மாணவிகள், ‘‘நீங்கள் பேசுவதே எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது’’ என்றனர். ‘‘எங்கள் வீட்டுக்கு வருவீர்களா?’’ என்று மீண்டும் கேட்டனர். அதற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘கண்டிப்பாக வருகிறேன். வந்தால் சாப்பாடு போடுவீர்களா?’’ என்று கேட்டார்.
அதற்கு அந்த மாணவிகள், ‘‘கண்டிப்பாக வாருங்கள். கறிசோறு போடுகிறோம்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். நாங்கள் படித்தது வீணாகி போகாமல் இருக்க எம்.பி.சி. படிப்பு சான்றிதழில் இருந்து பழங்குடியினருக்கான சான்றிதழாக மாற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கையில், ‘‘சட்டப்படி கட்டாயம் செய்து தருகிறேன்’’ என்றார்.